Sunday, 9 December 2012

தமிழகத்திற்கு பேஸ்புக்கில் புதுப் பெயர்.. இருளும், இருள் சார்ந்த இடமும்!


சென்னை: மின்தடையை வைத்து ஏகப்பட்ட எஸ்.எம்.எஸ். கலாய்ப்புகளை தமிழக மக்கள் பார்த்து விட்டனர். இந்த நிலையில், பேஸ்புக்கில் புதிதாக ஒரு படத்தைப் போட்டு மிரள வைத்துள்ளனர் சிலர்.
 a new image slamming tn power cut
தமிழன் அக்காலத்தில் நிலத்தை ஐவகையாக பிரித்து வைத்தான். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை என்பது இவை. குறிஞ்சி என்பது மலையும் மலை சார்ந்த இடமும் ஆகும். முல்லை என்பது வனமும், வனம் சார்ந்த இடமும் ஆகும். மருதம் என்பது வயலும் வயல் சார்ந்த இடமுமாகும். நெய்தல் என்பது கடலும் கடல் சார்ந்த இடமுமாகும். பாலை என்பது மணலும், மணல் சார்ந்த இடமுமாகும்.
இதை வைத்துத்தான் தற்போது பேஸ்புக்கில் விளையாடியுள்ளனர் சிலர். அதாவது இந்த ஐவகை நிலத்துடன் இன்னொரு நிலத்தை சேர்த்துள்ளனர். அதுதான் தமிழகமாம். அதற்கு அவர்கள் கொடுத்துள்ள விளக்கம், இருளும் இருள் சார்ந்த இடமும் என்பதாகும். அதில் கருப்பு நிறத்தில் தமிழகத்தின் வரைபடத்தைப் போட்டு இடது பக்கம் முதல்வர் ஜெயலலிதா மற்றும் வலது பக்கம் திமுக தலைவர் கருணாநிதியின் படத்தையும் போட்டு வைத்துள்ளனர்.
இந்த பேஸ்புக் கிண்டல் படம் படு வேகமாக இன்டர்நெட்டில் பரவி வருகிறதாம்.

2013 ஜூன் முதல் தமிழகத்தில் மின்தடையே இருக்காதாம் தெரியுமா: அமைச்சர் 'நத்தம்' சொல்லிட்டார்!


 No Power Cut Tn From June 2013 சென்னை: 2013ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தமிழகத்தில் மின்வெட்டே இருக்காது என்று மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். தற்போது இருக்கும் மின்வெட்டு பிரச்சனை டிசம்பர் மாதம் முதல் படிப்படியாகக் குறையும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்திய தொழில் வர்த்தக சபை கூட்டமைப்பு (ஃபிக்கி) சார்பில் சென்னையில் நிலைத்த நீடித்த எரிசக்தி மேலாண்மையின் புதிய யுகம் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது.
அதில் கலந்து கொண்ட மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசியதாவது,
தமிழகத்தின் மின் தேவைக்கும் உற்பத்திக்கும் இடையே உள்ள இடைவெளி 4,000 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது. இதற்கு மத்திய மின் தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய மின்சாரத்தின் அளவு குறைக்கப்பட்டுள்ளதே காரணம். மத்திய அரசிடம் கூடுதல் மின்சாரம் கேட்டும் அது எங்கள் கோரிக்கையை ஏற்கவில்லை.
வட மாநில மின் வழித் தடங்களுடன் தென் மாநிலங்களை முழுமையாக இணைக்காததால் தேவைக்கு அதிகமாக மின் உற்பத்தி செய்யும் மாநிலங்களில் இருந்து தமிழகத்தால் மின்சாரம் பெற முடியவில்லை. தற்போது வட மாநில மின் கட்டமைப்பில் இருந்து ஒரேயொரு வழித் தடம் தான் தென் மாநிலங்களை இணைக்கிறது. இந்த ஒரே வழித்தடத்தின் மூலம் தமிழகம், கர்நாடகம், கேரளா மற்றும் ஆந்திராவுக்கு மின்சாரம் கொண்டு வரப்படுகிறது. தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து மேலும் ஒரு வழித் தடத்தை அமைக்க மத்திய அரசு கடந்த மாதம் அனுமதி அளித்து. இதையடுத்து துவங்கப்பட்ட திட்டப்பணிகள் வரும் 2014ம் ஆண்டு மார்ச் மாதத்தில் தான் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2013ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தமிழகத்தில் மின்வெட்டே இருக்காது. மேட்டூர், வல்லூர், வடசென்னை அனல் மின் நிலையங்களில் இருந்து வரும் ஜூன் மாதம் முதல் 1,880 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இது தவிர சில தனியார் உற்பத்தியாளர்கள் வரும் 2013ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் மின் உற்பத்தியை துவக்குகின்றனர். அவர்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் முழு மின்சாரத்தையும் அரசுக்கே அளிப்பதாக உறுதியளித்துள்ளனர்.
மேலும் கூடங்குளம் அணு மின் நிலையத்தின் முதல் அணு உலையில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் முழுவதும் தமிழகத்திற்கு கிடைத்தால் தற்போதுள்ள 4,000 மெகாவாட் மின் பற்றாக்குறை வரும் ஜூன் மாதம் முதல் சீராகிவிடும். மேலும் 500 மெகாவாட் மின்சாரமும் கையிருப்பு இருக்கும்.
எனவே வரும் டிசம்பர் மாதம் முதல் மின்வெட்டு பிரச்சனை படிப்படியாக குறைவதோடு 2013ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தமிழகம் மின்வெட்டில்லா மாநிலமாக மாறும் என்றார்.

'பவர் கட்'டுக்கு நடுவே சமையல்... சாம்பாரில் மிதந்த பாம்பு...ஷாக்கில் நிலைகுலைந்த பெண்!


சென்னை: சென்னை அருகே மின்சாரத் தடை காரணமாக இருட்டில் சமையல் செய்தார் ஒரு பெண். சாம்பாரை வைத்து அடுப்பிலிருந்து பாத்திரத்தை இறக்கி வீட்டாருக்கு சாப்பாடு பரிமாறினார். அடுத்த நாள் காலையில் சாம்பார் இருந்த பாத்திரத்தைப் பார்த்தபோது, அதில், பாம்பின் எலும்புக் கூட கிடந்ததைப் அதிர்ச்சி அடைந்து மயங்கி விழுந்தவர் இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து தெளியாமல் பித்துப் பிடித்தவர் போல காணப்படுகிறார்.
சென்னை அகருகே வடக்குப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் மங்கம்மாள். 47 வயதான இவர் டிசம்பர் 4ம் தேதி மாலை 7 மணியளவில் சமையல் செய்துள்ளார். அப்போது மின்சாரம் இல்லை. 2 மணி நேர மின்வெட்டு என்பதால் இருட்டிலேயே சமையல் செய்து முடித்தார். சாதம் வைத்து, சாம்பார் வைத்தார். பின்னர் இரவில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் சாப்பாடு பரிமாறினார். வீட்டாரும் சாப்பிட்டு முடித்தனர்.
அடுத்த நாள் காலை எழுந்த மங்கம்மாள் பாத்திரங்களைக் கழுவ உட்கார்ந்தார். அப்போது சாம்பார் பாத்திரத்தை எடுத்த அவர் அதில் நீளமான ஒரு எலும்புக் கூடு கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதை வெளியில் எடுத்துப் பார்த்தபோது அது பாம்பின் உடல் என்று தெரிய வந்தது.
தகவல் தெரிந்து அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து விட்டனர். அவர்களில் சிலர் இது நல்ல பாம்பின் எலும்புக் கூடு என்று கூறவே மங்கம்மாள் பெரும் அதிர்ச்சி அடைந்து மயங்கி விழுந்து விட்டார். உடனடியாக அவரை டாக்டரிடம் கூட்டிச் சென்றனர். அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், அவருக்கு பாம்பின் விஷம் ஏறியிருக்கலாம் என்று கூறவே உடனடியாக திருத்தணியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்குப் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவரது உடலில் பாம்பு விஷம் ஏறவில்லை என்பது தெரிய வந்தது. இருப்பினும் தொடர்ந்து வாந்தி எடுத்தபடியும், மயங்கிய நிலையிலும் இருந்தார் மங்கம்மாள். இதையடுத்து அவரை சென்னை அரசு பொது மருத்துவமனைக்குக் கூட்டி வந்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், பாம்பு விஷம் அவரைத் தாக்கவில்லை, மாறாக புட் பாய்சன் ஆகியுள்ளது என்று கூறி அதற்குச் சிகிச்சை அளித்தனர்.
ஆனாலும் மங்கம்மாளின் பயம் இன்னும் போகவில்லை. பாம்பை நினைத்து பித்துப் பிடித்தவர் போலவே காணப்படுகிறார். மங்கம்மாள் ஏற்கனவே காது கேளாத பெண்மணி ஆவார். தற்போது பாம்பைச் சமைத்து சாப்பிட்டு விட்டதால் அந்த பயம் அவரை கடுமையாக பாதித்துள்ளதாக டாக்டர்கள் கூறுகின்றனர். அவருக்கு பயம் தெளியாவிட்டால் மன நல மருத்துவப் பரிசோதனைக்கு அவரை அனுப்பி வைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

கொல்கத்தாவில் கள்ளக்காதலனுடன் ஓடிய தங்கையின் தலையை துண்டித்த அண்ணன்


கொல்கத்தா: கொல்கத்தாவில் கள்ளக்காதலுடன் ஓடிப் போன தங்கையின் தலையைத் துண்டித்து அதனுடன் சரணடைந்த வாலிரை போலீசார் கைது செய்தனர்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்தவர் மேத்தாப் ஆலம்(29). டெய்லர். அவரது தங்கை நிலோபர் பீபி(22). கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு நிலோபருக்கும், அக்பர் என்பவருக்கும் திருமணம் நடந்தது. அவர்களுக்கு 6 வயதில் ஒரு மகனும், 4 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் நிலோபருக்கு பிரோஸ் எனற வாலிபருடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அவர் அக்பரின் சகோதரர் தன்னை கொடுமைப்படுத்துகிறார் என்று கூறிவிட்டு தனது கள்ளக்காதலனுடன் கடந்த மாதம் 28ம் தேதி வீட்டை விட்டு ஓடிவிட்டார்.
இதையடுத்து இது குறித்து நிலோபரின் தந்தை போலீசில் புகார் கொடுத்தார். இதற்கிடையே மேத்தாப் தனது தங்கை அய்யூப் நகரில் இருப்பதைக் கண்டுபிடித்து கடந்த வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு அங்கு சென்றார். குடும்ப மானத்தை காற்றில் பறக்கவிட்டுவிட்டு கள்ளக் காதலுனுடன் ஓடிய தங்கையைப் பார்த்ததும் அவரால் ஆத்திரத்தை அடக்க முடியவில்லை. உடனே தான் வைத்திருந்த வாளை எடுத்து தங்கையின் தலையை துண்டித்து கொன்றார்.
பின்னர் அந்த தலையை தூக்கிக் கொண்டு சென்று அருகில் உள்ள காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.
இது குறித்து இணை கமிஷனர் பல்லப் கன்டி கோஷ் கூறுகையில்,
பிரோஸையும் கொல்லத் திட்டமிட்டதாக மேத்தாப் தெரிவித்தார். ஆனால் மேத்தாப் அங்கு சென்ற நேரம் பிரோஸ் வீட்டில் இல்லை. நிலோபரை வெட்டும்போது பிரோஸின் உறவினர் சாபூ மேத்தாபை தடுக்க முயன்றார். இதில் சாபூவின் வலது கரம் கிட்டத்தட்ட துண்டாகிவிட்டது. தற்போது அவர் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார் என்றார்.